2068ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று கருதப்பட்ட அப்போபிஸ் என்ற சிறுகோள் ஒரு நூற்றாண்டுக்கு பூமியைத் தாக்காது என நாசாவின் புதிய அவதானிப்புகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டில் குறித்த சிறுகோள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது வானியலாளர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அவர்களின் கணக்கீடுகளின் படி அந்தக் கோள் பூமி மீது விரைவாக மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அந்தக் கணிப்பு, பின்னர் 2068இற்குப் பின்தள்ளப்பட்ட நிலையில் தற்போது நாசா, குறைந்தது 100 ஆண்டுகளில் இவ்வாறு மோதல் ஏற்படாது எனத் தெரிவித்துள்ளது.
இந்தச் சிறு கோளுக்கு பண்டைய எகிப்திய தெய்வத்தின் பெயரான அப்போபிஸ் (Apophis) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அப்போபிஸ் சிறுகோளின் ஒரு பகுதி பூமியைத் தாக்கினால், அது 506 மெகாதொன் குண்டுக்கு சமமான ஆற்றலை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டைவிட 28 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அப்போபிஸ், நமது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 19 ஆயிரத்து 800 மைல்கள் (21 ஆயிரம் கிலோமீற்றர்) தூரத்தில் பாதுகாப்பாக கடந்து செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.