பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து தொடரை வென்று முன்னிலைப் பெற்றுள்ளது.
நேப்பியர் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 17.5ஆவது ஓவரின் போது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழைக் குறுக்கிட்டது. இதனால் முதல் இன்னிங்ஸ் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளென் பிலிப்ஸ் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களையும் டேரில் மிட்செல் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 2 விக்கெட்டுகளையும் சய்பூதின், டஸ்கின் அஹமட் மற்றும் சொரிபூல் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து மழைக் குறுக்கிட்டதால், பங்களாதேஷ் அணிக்கு 16 ஓவர்களுக்கு 170 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எனினும், பங்களாதேஷ் அணியால் 16ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 142 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி டக்வத் லுயிஸ் முறைப்படி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சௌமியா சர்கார் 51 ஓட்டங்களையும் மொஹமட் நய்ம் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சௌத்தீ, ஹமீஷ் பென்னட் மற்றும் ஆடம் மில்ன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் க்ளென் பிலிப்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 31 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட க்ளென் பிலிப்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி, நாளை மறுதினம் ஒக்லாந்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.