ஹொங்கொங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் முக்கியமான ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்ததாகவும், அதனால் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்ததாகவும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கின் ஊடக ஜாம்பவானான ஜிம்மி லாய் மற்றும் அரசியல் தலைவரான மார்டின் லீ ஆகியோர் அனுமதி அளிக்கப்படாத பேரணியை நடத்தியதற்காக, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், அரசியல் ரீதியில் அவர்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு சிறிய குழு போராட்டம் நடத்தியது.
இந்த ஏழு பேரில் சிலர், மற்ற பல வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். அதில், 2019ஆம் ஆண்டு போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சீனா அறிவித்த தேசிய பாதுகாப்புச் சட்டமும் அடக்கம்.
சீனாவின் இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறுபவர்கள் மீது, கடுமையான அபராதமும், நீண்ட கால சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.