மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஆஷ்லே பார்டி மற்றும் பியன்கா ஆண்ரெஸ்கு ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
முதலாவது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும் உக்ரேனின் எலினா ஸ்விடோலினாவும் மோதினர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், ஆஷ்லே பார்டி சிறப்பாக விளையாடி 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இரண்டாவது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், கனடாவின் பியன்கா ஆண்ரெஸ்குவும் கிரேக்கத்தின் மரியா சக்கரியும் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டே இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்தது.
டை பிரேக் வரை நீண்ட இந்த செட்டில், பியன்கா ஆண்ரெஸ்கு செட்டை 7-6 என போராடிக் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஆண்ரெஸ்குக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மரியா சக்கரி, களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினார்.
இதில் மரியா சக்கரி நினைத்தப்படி செட்டை 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது செட் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இதில் இருவரும் விட்டுக்கொடுக்காமல் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினர். இதனால் செட் டை பிரேக் வரை நகர்ந்தது.
இதில் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் போராடிய பியன்கா ஆண்ரெஸ்கு செட்டை 7-4 என போராடிக் கைப்பற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் அடியயெடுத்து வைத்த பியன்கா ஆண்ரெஸ்கு, நாளை நடைபெறும் மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியை எதிர்த்து விளையாடவுள்ளார்.