வடக்கு மற்றும் கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தொழில்நுட்பத்தின் ஊடாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது.
இதன்போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்த விடயம் குறித்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்கும் வேலைத்திட்டத்தை வடக்கு, கிழக்கில் விரிவுப்படுத்தும் நோக்கில் பொருளாதார மத்திய நிலையங்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சதொச கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கு தற்பொழுது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனால் நாடு தழுவிய ரீதியில் இந்த வலைப்பின்னலை விரிவுபடுத்துவதற்காக தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.