இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் வாக்குமூலமொன்றினை பெற்றுக்கொள்வதற்காக திருமதி உலக அழகியான கரோலின் ஜூரிக்கு கறுவாத்தோட்டப் பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர்.
குறித்த அழைப்புக்கு ஏற்ப, கறுவாத்தோட்டப் பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரி வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னிலையாகியுள்ளார்.
2021ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள புஷ்பிகா டி சில்வா, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கரோலின் ஜூரிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையிலேயே அவர்மீது விசாரணை மேற்கொள்வதற்காக கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகுமாறு கரோலின் ஜூரிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற, திருமதி இலங்கை அழகிப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் ஜூரி, அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர். அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.
அதன்பின்னர் ஜூரி, மேடையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் தலையில் இருந்த கிரீடத்தை அகற்றி, இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்து அவரை நிகழ்வின் வெற்றியாளராக அறிவித்தார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.