தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்திய நேரப்படி இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகியிருந்த நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அத்துடன், அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் தமது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
குறிப்பாக, அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனசாமி, ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒரங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட கட்சிகளின் பிரதான வேட்பாளர்கள் வாக்களித்துள்ளார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று மாலை மூன்று மணி வரையில் 53.35 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு தெரிவித்துள்ளார்.
அத்துடன், எவ்விகதாக குறிப்பிடத்தக்க அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மாலை மூன்று வரையான நிலைவரப்படி 62.32 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
அத்துடன், கேரளா மாநிலத்தில் மாலை நான்கு மணி வரையான காத்தில் 58.66 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தலும் மேற்கு வங்காளத்தில் மூன்றாம் கட்டத் தேர்தலிலும் மக்கள் இன்று வாக்களித்து வருகின்றனர்.
இன்றைய தேர்தல் வாக்குப் பதிவுகள் இன்று மாலை ஏழு மணிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.