கொரோனா வைரஸ் தொற்று தமது நாட்டில் இல்லை என வடகொரியா உலக சுகாதார ஸ்தாபனத்திடம் அறிக்கையொன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார் கூறுகையில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி வடகொரியாவில் 23 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
எனினும் பரிசோதனை முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதன் பின்னர் கடந்த மார்ச் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
எனினும் அதன் முடிவுகளை உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது என்றும் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையும் கூற அரசு மறுக்கிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற அரசியல் மாநாடு ஒன்றில் உரையாற்றிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், ஏற்கனவே சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான பொருளாதார இழப்பு நாட்டை மிக மோசமான நிலைக்கு கொண்டுசென்றுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வடகொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலைத் தடுத்ததாக வடகொரியா தொடர்ச்சியாக கூறி வருகின்றமை குறப்பிடத்தக்கது.