செங்கடலில் பல ஆண்டுகளாக தரித்துநின்ற ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்வி சாவிஸ் சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காந்த விசையில் கப்பலின் அடிப்பகுதியில் ஒட்டிக் கொள்ளக் கூடிய கண்ணிவெடி மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மனிக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, ஈரானின் சரக்குக் கப்பல் எம்வி சாவிஸுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு செங்கடல் பகுதிக்கு வந்த அந்தக் கப்பல் இதுவரை அங்கேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் ஈரானின் இராணுவ கண்காணிப்புக்காகவும் அருகிலுள்ள யேமனில் தங்களது ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டுவருவதாக சவுதி அரேபியா குற்றஞ்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.