யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனின் கைது நடவடிக்கையானது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
அத்துடன், இது நடவடிக்கை மணிவண்ணனுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை எனவும் இலங்கை ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரம் மற்றும் தமிழினம் மீதான குரூர உணர்வையுமே வெளிப்படுத்தி நிற்கின்றது என கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமை சட்ட ரீதியாகவோ அல்லது தார்மீக ரீதியாகவோ நியாயப்படுத்த முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாநகரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சீருடைகளின் நிறங்களை வைத்து, மணிவண்ணன் புலிகளை மீளுருவாக்கம் செய்கிறார் என்று குற்றஞ்சாட்டுவது கேலிக்குரியது என அருந்தவபாலன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பேசுபொருளாகியுள்ள சீருடை வடிவமைப்பானது கொழும்பு மாநகர சபையைின் பணியாளர்களின் சீருடையை ஒத்தது எனவும், இதே வகையான நிறத்திலான சீருடைகள் வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதை வைத்து குறித்த நிற உடைகளைப் பயன்படுத்துபவர்கள் பயங்கரவாத்துக்குத் துணை போகின்றவர்கள் என மதிப்பிடுவது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்றதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில், மணிவண்ணனின் கைதானது அரச அடக்குமுறையின் வெளிப்பாடு என்பதுடன் பாசிசத்தின் மறுவடிவம் எனவும் நாட்டின் வருங்கால ஆட்சி வடிவத்துக்கான ஓர் எதிர்வுகூறல் என்றும் அருந்தவபாலன் கூறியுள்ளார்.
எனவே, இவ்வாறான செயற்பாடுகள் மணிவண்ணனுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை எனவும் அனைத்து தமிழர்களுக்குமான எச்சரிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.