பொருளாதார தடைகளை நீக்கும் பாதையில் ஈரான் வெற்றி பெறுவதை சகித்துக்கொள்ள முடியாத இஸ்ரேலியர்கள் ஈரானிய மக்களை பழிதீர்க்க விரும்புகிறார்கள் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஷாரீப் தெரிவித்துள்ளார்.
ஈரானில் புதிதாக செயற்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் மீதான தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நடான்ஸ் அணு ஆலை மேம்பட்ட இயந்திரங்களுடன் புனரமைக்கப்படும். அதேவேளையில் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு நாங்கள் பழிவாங்குவோம் என கூறினார்.
நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் இருக்கும் நடான்ஸ் அணுசக்தி மையத்தில் மின்சார வசதி செயலிழந்துள்ளது. எனினும், இந்த தாக்குதலில் யாரும் பாதிக்கப்படவோ, எந்த வித கசிவோ ஏற்படவில்லை
கடந்த சனிக்கிழமை, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருக்கும் புதிய மைய விலக்கு சுழற்சிக் கருவிகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்த மறுநாள் இந்த தாக்குதல் நடந்தது.