ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
மும்பை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரிஷப் பந்த் 51 ஓட்டங்களையும் டொம் கர்ரன் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், உனட்கட் 3 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோறிஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் மில்லர் 62 ஓட்டங்களையும் கிறிஸ் மோறிஸ் ஆட்டமிழக்காது 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி அணியின் பந்துவீச்சில், அவீஷ் கான் 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் மோறிஸ் மற்றும் கார்கிஸோ ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, நான்கு ஓவர்கள் வீசி 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த ராஜஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் தெரிவுசெய்யப்பட்டார்.