மறைந்த எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
99 வயதில் காலமான இளவரசர் ஃபிலிப்பின், இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில், பிரித்தானிய நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெறவுள்ளது.
ஆடம்பரமற்ற எளிமையான இறுதி நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு இளவரசர் ஃபிலிப் கேட்டுக் கொண்டதற்கு இனங்க இறுதி நிகழ்வு அரசு முறை நிகழ்வாக இல்லாமல், சடங்குகளாக இருக்கும்.
இந்த நிகழ்வில் 730க்கும் மேற்பட்ட படை வீரர்கள் பங்கேற்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்த உள்ளனர்.
பொதுமக்களுக்கு அனுமதி இல்லையென்பதால், இறுதி சடங்கு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும்.
தற்போது விண்ட்சர் கோட்டையில் உள்ள தனியார் தேவாலயத்தில் உள்ள இளவரசர் ஃபிலிப்பின் உடல், இளவரசரே வடிவமைத்த, மாற்றியமைக்கப்பட்ட ஜாகுவார் லேண்ட் ரோவரில் வைக்கப்பட்டு விண்ட்ஸரின் செயின்ட் ஜோர்ஜ் சேப்பலுக்கு கொண்டுச் செல்லப்படும்.
இந்த ஊர்வலத்தில் இளவரசர் சார்லஸ், ஆண்ட்ரூ, எட்வர்ட் மற்றும் இளவரசி அன்னே, மற்றும் பேரன்கள் இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் லேண்ட் ரோவருடன் நடந்துச் செல்வார்கள்.
பொது சுகாதார வழிகாட்டுதல்களை கணக்கில் எடுத்துக்கொள்வதற்காக இறுதித் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. இறுதிச் சடங்குகள் முழுக்க முழுக்க கோட்டையின் மைதானத்திற்குள் நடைபெறும்.
இதனிடையே இறுதி சடங்கிற்கான விருந்தினர் பட்டியலில் 30பேர் உள்ளனர். இதில் மூன்று ஜேர்மன் உறவினர்கள் உள்ளனர்.
இவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக தூரத்தை பின்பற்றி கொவிட்-19 விதிமுறைகளை கடைபிடிப்பார்கள். ராணி தனியாக அமர்ந்திருப்பார்.