வடக்கு ஆபிரிக்க நாடான துனிசியாவின் எஸ்பக்ஸ் நகரில் இருந்து ஐரோப்பிய நாடான இத்தாலியின் லம்பிடுசா தீவுகளுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு, மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 41பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐ.நா. அகதிகள் முகமை (யு.என்.எச்.சி.ஆர்) மற்றும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்) ஆகியவை இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தின் போது குறைந்தது ஒரு குழந்தை உட்பட 41 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாவும் உயிர்தப்பிய மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தேசிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
துனிசிய துறைமுக நகரம் ஆபிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் மோதல்கள் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஐரோப்பாவில் சிறந்த வாழ்க்கையைத் தேடும் மக்களுக்கு ஒரு முக்கிய புறப்படும் இடமாக மாறியுள்ளது.
கடந்த மாதம், 39 குடியேறியவர்கள் மற்றும் அகதிகள் ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் இறந்தனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதேபோன்ற மற்றொரு விபத்தில், ஒரு படகு மூழ்கியதில் குறைந்தது 60பேர் உயிரிழந்தனர்.