அடுத்த வாரம் நடுப்பகுதியில் ஹங்கேரி 40 சதவீத தடுப்பூசி வீதத்தை எட்டும் என்று பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு போட்டியிடும் தேர்தலை எதிர்கொள்ளும் ஓர்பன், இது நாடு மீண்டும் திறக்க உதவும் என்றும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாநில வானொலியில் உரையாற்றிய அவர், ‘தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பவர்கள் ஹோட்டல், உட்புற உணவகங்கள், திரையரங்குகள், சினிமாக்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு நிகழ்வுகள், பொது குளியல் மற்றும் பிறவற்றிற்கு செல்ல முடியும்’ என்று கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹங்கேரி, இந்த மாத தொடக்கத்தில் படிப்படியாக கடைகளையும் சேவைகளையும் மீண்டும் திறக்கத் தொடங்கியது.
ஒப்பீட்டளவில் வெற்றிகரமான தடுப்பூசி பிரச்சாரம் இருந்தபோதிலும், ஹங்கேரி அதிக தொற்று மற்றும் இறப்பு வீதத்துடன் சமீப காலமாக போராடி வருகின்றது.
இதனிடையே தொற்று நோய் எதிரொலியால், திங்களன்று ஆரம்ப பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திட்டத்தை மட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
ஏறக்குறைய 9.8 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட, மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரி, 761,000 நோய்த்தொற்றுகளையும் 26,000 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது.