காணாமல் போன இந்தோனேசிய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற்படைத் தளபதி யூடோ மார்கோனோ தெரிவித்துள்ளார்.
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் ஆறு சிதைவுகள், இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, காட்சிப்படுத்தப்பட்டது.
இன்று அதிகாலைக்குள் நீர்மூழ்கிக் கப்பலில் ஒக்ஸிஜன் தீர்ந்துவிடும் என்று எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில், இந்த செய்தி வந்துள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வந்ததாக நம்பப்படும் சிதைவுகளில் கிரீஸ் போத்தல், டார்பிடோ லாஞ்சரின் ஒரு பகுதி, உலோகக் குழாயின் ஒரு பகுதி, பிரார்த்தனை செய்யப் பயன்படுத்தப்படும் பாய்கள் மற்றும் எரிபொருள் ஆகியவை அடங்கும்
இவை கடலில் 850 மீட்டர் (930 கெஜம்) ஆழத்தில் ஒரு இடத்தில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கே.ஆர்.ஐ.நங்கலா-402 நீர்மூழ்கிக் கப்பலில் முந்தைய பயணத்தில் இருந்தவர்கள், இந்த சிதைவுகள் நீர்மூழ்கிக் கப்பலுக்கு சொந்தமானவை என்பதை உறுதிப்படுத்தியதாக கடற்படைத் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை அதிகாலை 53 பேருடன் பயணித்த கே.ஆர்.ஐ.நங்கலா-402 என்ற நீர்மூழ்கி கப்பல், பாலி தீவுக்கு வடக்கே பயிற்சியை மேற்கொண்டிருந்த போது, சுமார் 60 மைல் (100 கி.மீ) நீரில் காணாமல் போனது.
ஆழமான நீரில் மூழ்குவதற்கு நீர்மூழ்கிக் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர் தொடர்பு இழந்ததாக சில தகவல்கள் கூறுகின்றன. இந்தோனேசியாவால் இயக்கப்படும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த கப்பலும் ஒன்றாகும். இந்தோனேசியா தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றை இழப்பது இதுவே முதல் முறை.