யாழ்ப்பாணம்- பொன்னாலை மேற்கில், குடும்பமொன்று வசித்த தகரக் கொட்டகை எரிந்து நாசமாகியுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) இரவு, இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பெறுமதிமிக்க ஆவணங்களும் ஒரு தொகைப் பணமும் எரிந்து அழிந்துள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ரவிக்குமார் ஜோன்சன் மரீன் என்பவரின் தகரக் கொட்டகையே எரிந்து நாசமாகியுள்ளது.
நேற்று இரவு குடும்பத் தலைவி, சுவாமி படத்திற்கு முன்பாக விளக்கேற்றிவிட்டு, வெளியே வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளார்.
இதன்போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்ட அயலவர்கள் மற்றும் குடும்பத்தினர் தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்க முயன்றப்போதும் கூட கொட்டகை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவத்தில் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள், சைக்கிள் ஆவணங்கள், காணி உறுதி ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், மின்சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், வலைகள், உடுபுடவைகள் ஆகியனவும் எரிந்து அழிந்துள்ளன.
இதேவேளை குடும்ப தலைவர் பொன்னாலை ஸ்ரீகண்ணன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொருளாளராக இருந்தமையினால், தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் கடன் வழங்குவதற்காக இலட்சக்கணக்கான ரூபாய் பணமும் அவரிடம் இருந்துள்ளன.
குறித்த பணமும் எரிந்து அழிந்துள்ளன. இதில் ஒருதொகை நாணயத் தாள்கள் மாத்திரம் அரைகுறையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.
இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் கிராம சேவையாளர் ந.சிவரூபன் ஆகியோர் சேத விபரங்களை மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இந்த தகரக் கொட்டகையில் கணவன், மனைவி மற்றும் இரு பிள்ளைகள் வாழ்ந்து வந்துள்ளனர். குறைந்த வருமானம் காரணமாக ஒரு வீட்டினை அமைத்துக்கொள்ள முடியாத நிலைமையில் உள்ளனர்.
மேலும் இவர்கள் அரச வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அதற்கும் எந்ததொரு பதிலும் , அவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.