ஐ.பி.எல். ரி-20 தொடரின் 21ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மாயங் அகர்வால் 31 ஓட்டங்களையும் கிறிஸ் ஜோர்தான் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், பிரசீத் 3 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சிவம் மாவி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 124 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொல்த்தா அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஓய்ன் மோர்கன் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களையும் ராகுல் திரிபத்தி 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், மொஹமட் ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் ஹீதா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 40 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஓய்ன் மோர்கன் தெரிவுசெய்யப்பட்டார்.