இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று இரவு 9 மணி முதல் மே மாதம் 11 ஆம் திகதிவரை கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள், பால், இறைச்சி விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி குறித்த கடைகளை 6 மணி முதல் காலை 10 மணிவரை மாத்திரமே திறந்து வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தகுதியானவர்கள் தங்கள் பெயர் விபரங்களை முன்கூட்டியே பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் 14 நாட்களுக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அது குறித்து ஆலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.