கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க தவறியதாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிராக, ஐரோப்பிய ஒன்றியம் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
பிரித்தானியா- சுவீடன் நிறுவனத்தின் தடுப்பூசியான அஸ்ட்ராசெனெகா, ஐரோப்பாவில் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனெனில் இது ஃபைசர்- பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தயாரித்த தடுப்பூகளைக் காட்டிலும் மலிவானது மற்றும் பயன்படுத்த எளிதானது.
ஆனால், பிரஸ்ஸல்ஸும் வணிகமும் விநியோகங்களின் பற்றாக்குறை தொடர்பாக முரண்படுகின்றன.
இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டி கீர்ஸ்மேக்கர் கூறுகையில்,
“முன்கூட்டியே கொள்முதல் ஒப்பந்தத்தின் மீறல்களின் அடிப்படையில், அஸ்ட்ராஸெனெகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
ஒப்பந்தத்தின் சில விதிமுறைகள் மதிக்கப்படவில்லை. சரியான நேரத்தில் தடுப்பூசி அளவுகளை வழங்குவதை உறுதி செய்யவில்லை. அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் இந்த நடவடிக்கையை ஆதரித்தன.
ஐரோப்பிய குடிமக்களுக்கு உரிமையுள்ள மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாக்குறுதியளிக்கப்பட்ட போதுமான அளவுகளை விரைவாக வழங்குவதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்” என கூறினார்.