வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடுகள் சீராக இடம்பெறாமையினால் மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க குழு நகரசபை தலைவருடன் கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தது.
வவுனியா நகரசபை பகுதியில் குடியிருப்பாளர்கள் மற்றும் வர்த்தகர்களால் தரம் பிரித்து கழிவுகள் வழங்கப்பட்டால் மாத்திரமே கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என சில பகுதிகளுக்கு தெரிவிக்கப்பட்ட போதிலும் அதனை செயற்படுத்துவதற்கு சீரான பொறிமுறை மக்களுக்கு வழங்கப்படாமையினால் குடியிருப்பாளர்கள் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர்.
இந்நிலையில் கழிவுகளை தரம்பிரிக்காமையினால் கழிவுகளை பெற்றுக்கொள்ள முடியாது என நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களும் தெரிவித்தமையினால் பல வட்டாரங்களில் கழிவுகள் அகற்றப்பாமல் பெறும் அசளகரியத்திற்கு மக்கள் முகம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் இன்று இவ்விடயம் தொடர்பாகவும் இதற்கான சாதக நிலைமைகள் தொடர்பாகவும் வவுனியா நகரசபை தலைவருடன் உண்மை மற்றும் நல்லிணக்க குழு பிரதிநிதிகள் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது குறித்த குழுவினரால் கழிவகற்றல் செயற்பாட்டுக்கு சிறந்த பொறிமுறை தேவை எனவும் மக்களுக்கு கழிவுகளை தரம்பிரித்து வைப்பதற்கான நீண்ட கால பவனைக்குரிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் குடிருப்பாளர்களுக்கு போதுமான அறிவுறுத்தல்கள் வழங்கப்படாமல் குறித்த செயற்திட்டம் முன்னேடுக்கப்பட்டதனாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டதனையும் சுட்டிக்காட்டியிருந்தனர். இந் நிலையில் வவுனியா நகரசபை தலைவரினால் குறித்த குழுவுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டபோது,
18 டொன் கழிவுகள் வவுனியா நகரசபை பகுதியில் நாளான்றுக்கு அகற்றப்பட்டு வருவதாகவும் இதனை சீரான பொறிமுறையின் கீழ் செயற்படுத்தவே சில நடைமுறைகளை பின்பற்றியதாக தெரிவித்ததுடன் இதனால் மக்கள் அசெளகரியத்திற்குள்ளாகியிருந்தமை தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்த நடைமுறையினை தான் தளர்த்தியுள்ளதாகவும் தற்போது கழிவகற்றலில் சிக்கல் நிலை மக்களுக்கு இல்லை எனவும் தெரிவித்திருந்ததாக உண்மை மற்றும் நல்லிணக்க குழு தெரிவித்தது.
இதேவேளை நகரசபை தலைவர் சரியான பொறிமுறையின் கீழ் தரம்பிரித்து கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை நகரசபையின் திட்டத்தினை வரவேற்ற உண்மை மற்றும் நல்லிணக்க குழு இத்திட்டத்தினை அனைத்து இடங்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தாது முதலில் நகர்ப்பகுதியில் செயற்படுத்தி அதனூடாக வரும் அனுபவத்தின் ஊடாக ஏனைய வட்டாரங்களிலும் நடைமுறைப்படுத்துவது சிறந்த நடைமுறையாக இருக்கும் என ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.