கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து நேற்று நடக்கவிருந்த கொல்கத்தா, பெங்களுர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்துச் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கும் அணியின் நிர்வாகி, வாகன பராமரிப்பாளர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து ஒட்டுமொத்த சென்னை அணியும் தனிமைப்படுத்தப்பட்டது. அதே போன்று, கொல்கத்தா அணியோடு அண்மைய நாட்களில் போட்டிகளில் விளையாடிய அணிகளும் தனிமைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இன்று வெளியாகியுள்ள தகவலின்படி ஐ.பி.எல் 2021 போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தத் தகவலை ஐ.பி.எல்.லின் நிர்வாகி ப்ரிஜேஸ் பட்டேல் இன்று மதியம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஐ.பி.எல் நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்த முடிவானது சகல தரப்பினரதும் ஏகோபித்த ஆதரவோடு எடுக்கப்பட்டுள்ளது. வீரர்கள், பயிற்சியாளர்கள், அணிக்குழுவினர், ஏற்பாட்டாளர்கள், ஊழியர்கள் என யாருடைய பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விரும்பவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடரோடு தொடர்புபட்ட அனைவரும் தங்களது குடும்பங்களோடு பாதுகாப்பாக சென்று சேர்வதை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உறுதிப்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா, சென்னை அணிகளைத் தொடர்ந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரித்திமன் சகாவுக்கும் கொரோனா தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.