யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில், மிகுதிப் பணம் வழங்காது, தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தியதாக பயணியொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக தெரியவருவதாவது, “நேற்று மாலை 3.50 மணியளவில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் வவுனியாவில் இருந்து ஒருவர் ஏறியுள்ளார்.
இந்நிலையில், இவரது பேருந்துக் கட்டணமாக 260 ரூபாய்க்கு ஆயிரம் ரூபாய் தாளைக் கொடுத்துள்ளார்.
இதன்போது, நடத்துனர் மிகுதிப் பணமாக 235 ரூபாயைக் கொடுத்துவிட்டு மிகுதி 500 ரூபாயை பிறகு தருவதாகக் கூறியுள்ளார்.
என்றாலும், யாழ்ப்பாணத்தை வந்தடைவதற்குள் இரண்டு, மூன்று முறை மிகுதிப் பணத்தைக் கேட்டபோதும் பிறகு தருவதாக நடத்துனர் கூறியுள்ளார்.
இறுதியாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்த பின்னர், மிகுதிப் பணமாக ஐந்து ரூபாயை நடத்துனர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மிகுதிப் பணம் 505 ரூபாய் தர வேண்டும் என அந்தப் பயணி கேட்டபோது அதனை மறுத்த நடத்துனர், ஐந்த ரூபாய்தான் தர வேண்டும் எனவும் நீ 500 ரூபாய்தான் கொடுத்தாய் என்றும் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தான் ஆயிரம் ரூபாயைக் கொடுத்ததாக மீண்டும் தெரிவித்த பயணியை, சாரதியும் நடந்துனரும் இணைந்து அச்சுறுத்தியுள்ளனர்.
அத்துடன், பணத்தைத் தராவிட்டால் என்ன செய்வாய் எனவும் பொலிசுக்குச் செல்வது என்றால் செல் என்றும் அச்சுறுத்தியதாக பயணி குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடும் பிரயத்தனத்தின் பின்னர், பேருந்துப் பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு மிகுதிப் பணத்தைக் கொடுத்துவிட்டு தன்னை தூசன வார்த்தைகளில் பேசியதாக பயணி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக தனியார் பேருந்துகளில் இடம்பெறுவதாகவும் அவற்றை கேட்கப்போனால் நடத்துனர்கள் அச்சுறுத்தும் தொனிகளில் பேசுவதாகவும் ஏனைய பயணிகள் கூறியுள்ளனர்.