கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) காலை 4 மணி முதல் வருகிற 24ஆம் திகதி காலை 4 மணி வரை இரண்டு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
அதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பனின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சென்னையில் இருந்து மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடர்ந்து இரவு நேர பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்பு பஸ்கள் முழுமையாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இன்று கடைசியாக புறப்படும் பஸ்கள் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து மார்த்தாண்டத்தி்ற்கு இரவு 6 மணி, நாகர்கோவிலுக்கு இரவு 7 மணி, தூத்துக்குடி இரவு 7 மணி, செங்கோட்டை 7.30 மணி, நெல்லை இரவு 8 மணி, திண்டுக்கல் 8 மணி, மதுரை இரவு 11.30 மணி, திருச்சி இரவு 11.45 மணிக்கு இயக்கப்படுகிறது.
சிறப்பு பஸ்கள் அனைத்தும் தமிழக அரசு விதித்துள்ள நோய் தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளான, கட்டாய முககவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றியே பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகளும் இதனை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பொதுமக்கள், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இணையதள வசதியான www.tnstc.in மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொண்டு பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் பின்பற்றி தங்கள் சொந்த இடங்களுக்கு பயணம் செய்ய வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை பணிசெய்யும் இடத்திலிருந்து தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் தேவைப்பட்டால் பஸ் வசதி செய்து தரப்படும்.
சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகம் 94450 30523, சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 94450 14416, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் 94450 21206, கோவை 94422 68635, கும்பகோணம் 94879 95529 இந்த செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.
மேற்கண்ட தகவல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.