கொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக கொடிகாமம் வடக்கு மற்றும் மத்தி ஆகிய இரு கிராம சேவையலாளர் பிரிவு கடந்த 5ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ளது.
அதனால் அப்பகுதி ஊடாக செல்லும் கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதி கடந்த 3 நாட்களாக மூடப்பட்டு இருந்தமையால், குறித்த வீதியினால் பயணம் செய்த பலரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து, பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, ” பிரதான வீதிகளினூடான போக்குவரத்தினை தடை செய்யவில்லை எனவும், குறித்த இரு கிராமங்களுக்குள் உட்செல்ல, வெளியேற மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது குறித்த வீதி ஊடாக போக்குவரத்திற்கு இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.
அதேவேளை கொடிகாமம் மத்தி மற்றும் வடக்கு ஆகிய இரு கிராம சேவையாளர் பிரிவுகளும் தொடர்ந்து முடக்கத்தில் உள்ளதாகவும், குறித்த இரு கிராமத்திற்குள் உட்செல்லவோ, வெளியேறவோ அனுமதி இல்லை எனவும், அப்பகுதி ஊடாக செல்லும் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.