ரஷ்யா சர்வதேச சட்டத்தை மதிக்கிறது எனவும் எனினும், தேசிய நலனில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்றும் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிரான வெற்றியின் 76ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வெற்றி விழா மற்றும் அணிவகுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
ரஷ்யாவின் இராணுவ பலத்தை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெற்ற குறித்த அணிவகுப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகர வீதிகளில் நடைபெற்ற அணிவகுப்பில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பங்கேற்றதுடன் சுமார் 190 இராணுவ உபகரணங்கள், படைக்கலங்கள் ஈடுபடுத்தப்பட்டன. அத்துடன், 76 போர் விமானங்கள் மற்றும் ஹெலிஹொப்டர்களும் அணிவகுப்பை நடத்தியிருந்தன.
இதன்போது உரையாற்றிய புடின், சோவியத் மக்கள் தங்கள் புனித சத்தியத்தைக் கடைப்பிடித்தனர் எனவும் தாயகத்தைப் பாதுகாத்தனர் என்றும் கூறினார்.
அத்துடன், ரஷ்யா தொடர்ந்து சர்வதேச சட்டத்தைப் பாதுகாக்கிறது. அதேநேரத்தில், நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக எங்கள் தேசிய நலன்களை உறுதியாகப் பாதுகாப்பதிலும் உறுதிகொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.