வடக்கு அரேபிய கடலின் சர்வதேச கடற்பரப்பில் பயணம் செய்த சட்டவிரோத கப்பலில் இருந்து ரஷ்ய மற்றும் சீன ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது.
யு.எஸ்.எஸ். மொன்டரி என்ற ஏவுகணைக் கப்பலில் சென்ற அமெரிக்கக் கடற்படையே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
கடந்த மே 6, 7ஆம் திகதிகளில் வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு ஆயுதங்களுடனான கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பஹ்ரைனைத் தளமாகக் கொண்ட அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது.
குறித்த ஆயுதக் கப்பலில், டசின் கணக்கான ரஷ்யா தயாரிப்பிலான ஏவுகணைகள், ஆயிரக்கணக்கான சீன வகை 56ரக துப்பாக்கிகள் மற்றும் நூற்றுக்கணக்கான பி.கே.எம் இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் ரொக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் உள்ளிட்ட பெருந்தொகை ஆயுதங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த ஆயுதங்களுடனான கப்பல் அமெரிக்கக் கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இந்த ஆயுத விநியோகம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் அமெரிக்க கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, யேமனில் நீண்டகாலமாக போர் நடைபெற்றுவரும் நிலையில், இந்த ஆயுதங்கள் யேமனுக்குக் கொண்டுசெல்லப்படுதாக அமெரிக்கக் கடற்படைக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.