இஸ்ரேலில் தொடரும் வன்முறையை அடுத்து லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு படையினர் உள்ளூர் பொலிஸாருக்கு வன்முறையை கட்டுப்படுத்துவதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் உதவியாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் லோட் நகர் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக நேற்று முழுவதும் இருதரப்பும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது.
இதனையடுத்து, காசா டவர் கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ரொக்கெட்டுகளை ஏவியது.
இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்பால் தடுக்கப்பட்டன. எனினும் சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஏனைய நகரங்களில் விழுந்தன.
இதில் பேருந்து, வாகனங்கள், கட்டடங்கள் தீக்கிரையானது. மேலும் ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையில் காசா மற்றும் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேலிய யூதர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த சம்பவங்களால் லோட் நகரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையிலேயே வன்முறையைக் கட்டுப்படுத்தும் விதமாக லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்தார்.
ஹமாஸ் அரசியல் தலைமையின் அலுவலகமாக செயற்பட்டுவந்த 13 மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்!