கொரோனா தொற்றின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது நோயாளிகளின் சிகிச்சைக்காக விநியோகிக்கப்பட்ட ஒக்சிஜனை விட தற்போது மும்மடங்கு அதிகமாக விநியோகிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், ‘நாட்டில் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள், ஒக்சிஜன் ஆகியவை கிடைப்பது விநியோகிக்கப்படுவது தொடர்பாக பிரதமர் தலைமையில் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது.
அப்போது மாநிலங்களுக்கு தேவையான அளவு மருந்துகள் வழங்கப்படுவதாகவும், மருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கு உற்பத்தியாளர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானப் படை விமானங்களில் ஒக்சிஜன் டேங்கர்கள் உள்ளிட்டவை கொண்டுவரப்படுவது, ஒக்சிஜன் ரயில்களின் செயல்பாடு, ஒக்சிஜன் செறிவூட்டிகள், ஒக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டுவரப்படுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கமளித்தனர்.
பின்னர் இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, சில மாநிலங்களில் செயற்கை சுவாசக் கருவிகள் தரமாக இல்லை என அங்குள்ள அதிகாரிகளிடம் முறைப்பாடு எழுந்துள்ளது.
இதனால் அவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. கொரோனா சிகிச்சைக்கான மருந்து விநியோகம், சில பகுதிகளில் மியூகோர்மைகோசிஸ் என்ற அரிதான பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளமை குறித்து மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.