காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதல் குறித்து துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து அரப் நியூஸ் வெளியிட்ட செய்தியில், ‘ஹமாஸ் – இஸ்ரேல் தாக்குதல், ஜெருசலேம் முன்னேற்றத்திற்காக ரஷ்யாவும், துருக்கியும் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து புடினும், எர்டோகனும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இப்பிரச்சினையில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பு அவசியம் என்று புடினிடம், எர்டோகன் வலியுறுத்தியுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்வதற்கு பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்ரேல், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்தது.
இதனால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மோதல், கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மதவழிபாட்டு தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெருமளவில் குவிந்த பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். அப்போது, இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதுவரை மோதலில் பாலஸ்தீனத்தில் 69பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 17 குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.