கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம் மனதிலும் ஆழ பதிந்த நினைவை அழிக்க முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘ஒவ்வொரு ஆண்டும் மே 18 என்பது தமிழின அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளாகும். மனிதர்கள் கொல்லப்பட்டாலும் வரலாறு கொல்லப்பட முடியாதது என்பதை நினைவு கொள்ளும் நாளாகும்.
2010ஆம் ஆண்டு முதல் இனவெறி அரசாங்கங்களின் தடைகள் இடையூறுகள் எல்லாவற்றையும் மீறியும் நாம் எல்லோரும் பல்வேறு வழிகளில் இந்நாளை நினைவு கூர்ந்தே வந்திருக்கிறோம். இதன் ஒரு அடையாளமாகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் எளிமையான நினைவுத்தூபி நிறுவப்பட்டது.
நினைவேந்தல் நிகழ்வுகளை தடுத்து வந்த அரசாங்கம் இப்பொழுது அந்த நினைவு தூபியையும் இரவோடு இரவாக இடித்தழித்துவிட்டு அப்படி ஒரு தேவை இராணுவத்துக்கு இல்லை என்கிறது.
முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து நின்றுகொண்டு நினைவுத்தூபி அழித்தது பற்றி தமக்கு தெரியாது என்கின்றனர்.
கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம். ஆனால் கல்லுப்போல ஒவ்வொரு தமிழன் மனதிலும் ஆழ பதிந்த நினைவை, வரலாற்றை எமது இனம் இருக்கும் வரை அழிக்க முடியாது . இதனை இனவாத சிங்கள தேசம் புரிந்த கொள்ள வேண்டும்.
நிகழ்கால அரசாங்கம் பதவிக்கு வந்த சென்ற ஆண்டு முதல் கட்டவிழ்த்துவிடப்பட்ட கடும்போக்குத் தனம் எம் இனத்தை தளர்வடையச் செய்யமாட்டாது என்பதை சென்ற ஆண்டிலும் நிருபித்தோம்.
அதேபோன்று இந்த வருடமும் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணிக்கு எமது இல்லங்கள் ஒவ்வொன்றிலும் பகிரங்கமாக தீபங்கள் ஏற்றி அநியாமாக கொல்லப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் நினைவு கூர்ந்து வணங்கி எமது தணியாத விடுதலை உணர்வை வெளிப்படுத்தி நிற்போம்’ என தெரிவித்தார்.