இலங்கையில் நீதிவழங்கலுக்கு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என அமெரிக்கா மற்றும் கனடா ஆகியன தனித்தனியாக வலியுறுத்தியுள்ளன.
யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ளமையை குறிக்கும் வகையில் ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார குழு தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளது.
அப்பதிவில், யுத்தம் நிறைவடைந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோரை நினைவு கூருவதுடன், அர்த்தமுள்ள நீதியும், பொறுப்புக்கூறலும் அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளன.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சட்டங்களில் இருந்து தப்பிக் கொள்கின்ற நிலைமை தொடர்கின்றமையானது, நல்லிணக்க முயற்சிகளை பெரிதும் பாதித்துள்ளது என்றும் ஐக்கிய அமெரிக்காவின் வெளிவிவகார குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமையானது, நல்லிணக்க முயற்சிகளுக்கு தொடர்ந்து தடையாக உள்ளது என கனேடிய பாராளுமன்றத்தின் பொதுச்சபையின் வெளிவிவகாரக் குழுவின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மோசமடைந்து வரும் நிலைமைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் கடந்த ஜனவரியில் வெளியிட்ட அறிக்கையின் கரிசனைகளை பகிர்ந்து கொள்வதாகவும் கனடா அறிவித்துள்ளது. (நன்றி கேசரி)