இல்ரேலின் கடுமையான தாக்குதல்களால் பேரிழப்புகளை சந்தித்துள்ள காஸா முனைக்கு, ஐ.நா. மற்றும் உலகின் பல நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் அனுப்பியுள்ள உதவிப்பொருட்களை காஸாவிற்குள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.
சண்டை நடைபெறுவதற்கு முன்பிருந்தே காஸா முனையின் எல்லைகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும் அத்தியாவசிய பொருட்களை காஸாவிற்குள் கொண்டு செல்ல அனுமதித்திருந்தது.
ஆனால், கடந்த 11 நாட்கள் நடைபெற்ற இந்த மோதலின் போது காஸாவின் எல்லைகள் முழுவதையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. எந்த ஒரு வாகனமும் காஸாமுனைக்குள் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.
இதனால் ஐ.நா. மற்றும் உலக நாடுகள் அனுப்பிய உதவி பொருட்கள் காஸாவிற்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் நேற்று (வெள்ளிக்கிழமை) அமுலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து ஐ.நா. தொண்டு நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகள் அனுப்பிய மனிதாபிமான ரீதியிலான உதவி பொருட்களை ஏற்றிவந்த சரக்கு லொரிகளை கிரம் ஷலோம் எல்லை வழியாக காஸா முனைக்குள் செல்ல இஸ்ரேல் அரசாங்கம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து உணவு, கொரோனா தடுப்பூசிகள், மருந்துப்பொருட்கள் உட்பட பல்வேறு உதவிப்பொருட்களை ஏற்றிக்கொண்டு 13 சரக்கு லொரிகள் இஸ்ரேலில் இருந்து காஸா முனைக்குள் நுழைந்துள்ளன.
இந்த உதவிப்பொருட்கள் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் வாழும் பாலஸ்தீனர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.