அமெரிக்கா இதுவரை 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் -19 நிவாரணத்தை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய தெற்காசிய நாடுகளுக்கும் 80 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்கா இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவுக்கு 500 மில்லியன் டொலருக்கும் அதிகமான கொவிட் நிவாரணங்களை வழங்கியுள்ளது.
இதில் அமெரிக்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் குடிமக்களின் பங்களிப்புகள் உள்ளடங்குகின்றன
மேலும் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய தெற்காசிய நாடுகளுக்கும் இப்போது அந்த உதவியை வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில் நாங்கள், சுகாதாரப் பொருட்கள், ஒட்சிசன் விநியோகம் மற்றும் 95 முகக்கவசங்கள், விரைவாக நோயறிதல் தொடர்பான சாதனங்கள் மற்றும் மருந்து ஆகியவைகளை ஏழு விமானங்கள் ஊடாக இதுவரை ஏற்றுமதி செய்துள்ளோம்.
அத்துடன் 80 மில்லியன் டோஸைப் பொறுத்தவரை (கொவிட் -19 தடுப்பூசிகள்), புரிந்துகொள்ளக்கூடியது என்னவென்றால் 60 மில்லியன் அஸ்ட்ராஜெனெகாவிலும், அங்கீகரிக்கப்பட்ட மூன்று தடுப்பூசிகளில் 20 மில்லியனிலும் அதிக ஆர்வம் மக்களுக்கு இருக்கின்றமை எங்களுக்குத் தெரியும்.
இந்த தடுப்பூசி அளவை அமெரிக்கா எவ்வாறு விநியோகிக்க மற்றும் பகிர்ந்து கொள்ளப் போகிறது என்பதைத் தீர்மானிக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் மற்றும் வெளியுறவுத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட குழு விவாதித்து வருகிறது.
இதேவேளை வைரஸ் தொற்றினால் இந்திய மக்கள் அனுபவித்த அனைத்து அவலமும் வெளிப்படையாக நம் மனதில் உள்ளது.
ஆனாலும் உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளும் பிராந்தியங்களும் ஆழமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவைகளுக்கும் உதவ வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
எனவே, எதிர்வரும் நாட்களில் இவ்விடயங்கள் தொடர்பாக நாங்கள் அதிகம் கவனம் செலுத்துவோம்” என ஜென் சாகி குறிப்பிட்டுள்ளார்.