தாய் டயானா மறைவுக்கு பின் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரி அமெரிக்க பேச்சு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேயுடன் மன ஆரோக்கியம் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘நான் முற்றிலும் உதவியற்றவனாக உணர்ந்தேன். எனது குடும்பம் எனக்கு உதவும் என்று நினைத்தேன். என்னால் அப்போது எந்த உதவியும் அம்மாவுக்கு செய்ய முடியாமல் போனதை எண்ணின் நான் வருந்தினேன். அம்மாவுக்கு நடந்த விபத்தை எண்ணி எனக்கு கோபம் வந்தது.
ஒரு சிறுவனாக என் மீது அப்போது பட்ட கெமராவின் பிளாஷ் வெளிச்சம் எனது குருதியை கொதிக்க செய்தது. அம்மாவின் மரணத்தை எண்ணி எண்ணி மது குடிக்கும் பழக்கத்திற்கு பழகினேன். சமயங்களில் போதை மருந்துகளை கூட எடுத்துக் கொண்டேன்.
ஏன் என்றால் எனக்குள் இருக்கும் உணர்ச்சிகளை அந்த பழக்கம் முகமூடி போட்டு மறைத்ததாக நான் கருதினேன். ஒரு கட்டத்தில் சுயக் கட்டுப்பாட்டுடன் குடிப்பதை கட்டுப்படுத்த முயற்சி செய்தேன். ஆனால் வாரம் முழுவதும் குடிக்காமல் இருந்தாலும் அதை எல்லாம் ஒரே நாளில் குடித்து தீர்த்தேன்.
ஆனால், என்னுடைய ஒவ்வொரு கேள்வியும், கோரிக்கையும், எச்சரிக்கையும் அது எதுவாக இருந்தாலும் மொத்த மவுனம் அல்லது மொத்த புறக்கணிப்பை சந்தித்தது’ என கூறினார்.
கடந்த 1997ஆம் ஆண்டு ஒகஸ்ட் 31ஆம் திகதி வேல்ஸின் இளவரசி டயானா, பரிஸில் புகைப்படக் கலைஞர்களால் பின்தொடரப்பட்டபோது கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகிய இருவரும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பிலிருந்து விலகி தங்களது மகன் ஆர்ச்சியுடன் அமெரிக்காவில் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.