ஷேகுபுரா மாவட்டத்திலுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளதாக தனியார் தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது.
பி.எம்.எல்-என் மேலாளர் நவாஸ் ஷெரீப்பின் அசையா சொத்துக்களை ஏலம் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு தேசிய நிர்வாக அமைப்பு (என்.ஏ.பி) தாக்கல் செய்திருந்த மனுவினை, நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து, ஃபெரோஸ்வாட்டானில் 88.4 ஏக்கர் விவசாய நிலங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன.
இதன்போது வர்த்தகர் முகமது போடா,ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 10.1 மில்லியன் ரூபாய் ஏலம் எடுத்தார்.
அதாவது ஷேகுபுரா மாநகராட்சியில், ஏலம் ஏக்கருக்கு 70 மில்லியன் ரூபாயில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் மூன்று பேர் பங்கேற்று இருந்தனர் என கூடுதல் துணை ஆணையாளர் பைசல் சலீம் கூறினார்.
மேலும் அதிக ஏலம், ஏக்கருக்கு 10.1 மில்லியன் ரூபாய் என்றும் நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் மொத்தம் சுமார் 115 மில்லியன் ரூபாயை தேசிய கருவூலத்தில் வைப்பிலிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் 23ஆம் திகதியன்று 0135 இலக்கத்திலுள்ள வீடு, அப்பர் மால், லாகூர் மற்றும் 88.4 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆகியவற்றையும் ஏனைய அசையா சொத்துக்களையும் 60 நாட்களுக்குள் விற்குமாறு பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி சையத் அஸ்கர் அலி லாகூர், ஷேகுபுரா துணை ஆணையாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு கிடைத்த பரிசு பொருட்களில் முறைகேடு செய்ததாகவே நவாஸ் ஷெரீப்பின் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன்போது வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளாமல் பிரிட்டனுக்கு சென்று விட்டார்.
இதனால் அவரை கடந்த 2020 செப்டெம்பர் மாதம், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை தப்பியோடிய குற்றவாளியாக அறிவித்தது.