வாகன இறக்குமதிக்கு நாட்டில் இடைக்கால தடை விதித்த போதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இவை டொயோட்டா லங்கா நிறுவனம் வழியாக ஜப்பானில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி உள்ளூர் மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை ஒப்படைத்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு வாகனத்தை கொள்வனவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கருவூலத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை இவற்றைத்தவிர 50 அம்பியூலன்ஸ்கள், 50 தண்ணீர் லொரிகள் மற்றும் 50 டபுள் கப்களும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னர் விதிக்கப்பட்ட வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த முடிவின் அடிப்படையில் 3.5 பில்லியன் டொலர் செலவில் நிதியமைச்சு 227 சொகுசு லேண்ட் குரூசர் எஸ்யூவிகள் உட்பட 399 வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் களப்பணிக்குத் தேவையான வாகனங்களின் அவசியத்தை சுட்டிக்காட்டி நாடாளுமன்ற சபாநாயகர் சமீபத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.