எந்தவொரு தனியார் வர்த்தகர், நிறுவனத்திடமிருந்தும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு அஸ்ட்ராசெனகா நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் போலியானதாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாகவே கொள்வனவு செய்ய வேண்டாம் என தாம் வலியுறுத்துவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்கனவே அஸ்ட்ராசெனகா தடுப்பூசியினன செலுத்திக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிக்காக 6 இலட்சம் மருந்துகள் தேவையாகவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தமை காரணமாக சீரம் நிறுவனத்தினால் இலங்கைக்கு உறுதியளித்தப்படி இரண்டாவதாக செலுத்த வேண்டிய அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை வழங்க முடியாது போயுள்ளது.
எனினும் தடுப்பூசிகளை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்பதற்காக அதிக விலையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்தது.
இதற்காக 15 இற்கும் மேற்பட்ட சர்வதேச தனியார் நிறுவனங்களுடன் இலங்கை அரச அதிகாரிகள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட தடுப்பூசிகளின் தரத்தினை உறுதி செய்ய அஸ்ட்ராசெனகா தாய் நிறுவனத்தை அரசாங்க அதிகாரிகள் அனுகியிருந்தனர்.
இதனையடுத்தே தனியாரிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.