திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் கொரோனா நிலைமைகள் தொடர்பாக இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வீ.பிரேமானந் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, ”கடந்த 24 மணித்தியாலயத்தில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்
இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது .
அதேவேளை கிண்ணியா, மூதூர், உப்புவெளி, திருகொணமலை, குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர் ஆகிய வைத்திய சுகாதார அதிகாரி பிரிவுகளில் புதிதாக 73 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3270 ஆக அதிகரித்துள்ளது.
ஆகவே பொதுமக்கள், சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி அவதானமாக செயற்படுங்கள்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.