தடுப்பூசி முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 18 முதல் 44 வயதினருக்கான, தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
தி.மு.க நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், முகாமுக்கு வெளியே நின்றிருந்த முன்கள பணியாளர்கள், காவல் துறையால் அப்புறப்படுத்தப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற சம்பங்களால் முன்கள பணியாளர்கள் அலைக்கழிக்கப்படுவதுடன், கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகுக்கிறது. அத்துடன் முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.கவினரின் செயல் குந்தகம் விளைவிப்பதுபோல் உள்ளது.
இதுபோன்று முகாம்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.