பிரேஸிலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு எதிராக, மாபெரும் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரத்தில், ஒன்று கூடிய 10,000 மக்கள் வீதிகளில் பேரணியாக சென்று தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இந்த போராட்டத்தின் போது, ஆரம்பத்திலிருந்தே ஜனாதிபதி கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதில் மெத்தனமாக செயற்பட்டதாக குற்றம்சாட்டிய மக்கள், ‘போல்சனாரோ இனப்படுகொலை’ மற்றும் ‘போல்சனாரோ பதவியை விட்டு வெளியேறு’ என கோஷமிட்டனர்.
மேலும், இதேபோன்ற பேரணிகள் மற்ற முக்கிய நகரங்களிலும் நடத்தப்பட்டன. இது பல மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போல்சனாரோவுக்கு எதிரான கோப அலைகளில் சமீபத்திய வெளிப்பாடாகும்.
தொற்றுநோயின் ஆரம்பத்தில், தீவிர வலதுசாரி ஜனாதிபதியான ஜெய்ர் போல்சனாரோ, கொரோனா வைரஸ் தொற்று ஒரு சிறிய காய்ச்சல் என்று நிராகரித்ததோடு வீட்டிலேயே தங்கியிருக்கும் நடவடிக்கைகள் மற்றும் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தவில்லை.
அத்துடன் பயனற்ற மருந்துகளைத் தூண்டுவது, தடுப்பூசிகளின் சலுகைகளை மறுப்பது மற்றும் ஒக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்பார்க்கத் தவறியது என பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்தநிலையில் அவருக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடியுள்ளனர். குறிப்பாக, நடந்த பேரணிகளின் கருப்பொருளில் ஒன்று, போல்சனாரோ அரசாங்கம் முன்னதாக பிரேஸிலின் தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கினால் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்பதுதான்.
அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையை கொண்டுள்ள பிரேஸிலில், இதுவரை 16,515,120பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 462,092பேர் உயிரிழந்துள்ளனர்.