நைஜீரியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய பாடசாலையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
டெஜினா நகரில் உள்ள சாலிகு டாங்கோ இஸ்லாமியா என்ற பாடசாலையில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒரு ஆசிரியர் உட்பட 150 மாணவர்களைக் காணவில்லை என மற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் தற்போது மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பு உடனடியாக பொறுப்பேற்கவில்லை. ஆனால் அங்கு ஆதிக்கம் செலுத்தும் போக்கோஹராம் பயங்கரவாத அமைப்பினர் இந்த கடத்தல் சம்பவத்தை மேற்கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
அண்டை மாநிலமான கடுனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 14பேர் விடுவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து டெஜினாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
வட மாநிலங்களில் பணத்திற்காக கடத்தல்கள் அதிகரித்து வருகின்றன. பெப்ரவரி மாதம் ஜம்பாரா மாநிலத்தின் ஜங்கேபேவில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து கிட்டத்தட்ட 300 சிறுமிகளை ஆயுதமேந்தியவர்கள் அழைத்துச் சென்றனர். பின்னர் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.