ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
செம்மண் தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க இத்தொடரில், தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், கிரேக்கத்தின் ஸ்டெபீனோஸ் ஸிட்சிபாஸ், பிரான்ஸின் ஜெரமி சார்டியை எதிர்கொண்டார்.
முதல் செட்டே இரசிகர்களை உச்ச விறுவிறுப்புக்கு கொண்டுச் சென்றது. டை பிரேக் நகர்ந்த இந்த செட்டில் 7-6 என ஸிட்சிபாஸ், செட்டைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஸிட்சிபாஸ், அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-3, 6-1 என்ற செட் கணக்குகளில் எளிதாக வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியொன்றில், அமெரிக்காவின் மெடிஸன் கீஸ், பிரான்ஸின் ஒசேன் டோடினுடன் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்குகளில் மெடிஸன் கீஸ், வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றார்.