வியாபார பாஸ் நடைமுறைக்கு வர்த்த கசங்கத்தின் அனுமதி பெறத்தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு. திலீபன் தெரிவித்துள்ளார்.
வர்த்தக சங்கத்தின் அனுமதியினூடாகவே வியாபார அனுமதி வரங்கப்பட்டமை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “கொரோனா தாக்கத்தினால் எம்மக்கள் சொல்லொணா துயரத்தினை அனுபவித்து வரும் இந்நேரத்தில், அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள, அரசாங்கம் சில விதிமுறைகளோடு சில வியாபார நிலையங்களுக்கு அனுமதியளிக்கிறது.
வவுனியா மாவட்டத்தில், இவ் அனுமதியை பெறவேண்டுமாயின் முதலில் வர்த்தக சங்கத்தின் அனுமதியை பெறவேண்டும் என்கிற நடைமுறை இருந்து வந்தது.
இதனால் தாம் பல இன்னல்களை எதிர்கொள்வதாக வியாபார நிலைய உரிமையாளர்கள் என்னிடம் தெரிவித்தனர். உடனடியாக ஆளுநரை தொடர்புகொண்டு, மேற்படி விடயத்தை தெரிவித்ததையடுத்து, இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இனி அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி பெறவேண்டுமாயின், நீங்கள் நேரடியாக உங்கள் பிரிவு பிரதேச செயலாளர் ஊடாக இவ்வனுமதிக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுங்கள்.
கொரோனா காலப்பகுதியில் எம்மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, பட்டினியின்றியும் இருக்கவேண்டும் இதுதான் இப்போதைக்கு எனது நோக்கம்.
இந்நிலையில் சிலர் தமது பெயரையும் தம்மூடாகவே வவுனியாவில் அனைத்தையும் நடத்தி முடித்துவிட வேண்டும் என்ற கீழ்த்தரமான சிந்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.