ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றான ‘கார்க்’ போர்க்கப்பல், ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது.
ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இந்த கப்பலில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 2:25 மணியளவில் திடீரென தீ பிடித்தது.
இந்த தீயிணை கட்டுப்படுத்த 20 மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், இறுதியில் தோல்வியில் முடிந்தது.
கப்பல் கடலில் அப்படியே மூழ்கி கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகளை அணிந்து கப்பலிலிருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர்.
கப்பலில் தீ பிடித்ததற்கான காரணம் என்ன என்பதை ஈரான் கடற்படை உடனடியாக தெரிவிக்கவில்லை. எனவே இது எதேச்சையாக நடந்த விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் கட்டப்பட்டு 1977ஆம் ஆண்டு ஈரானிடம் ஒப்படைக்கப்பட்ட ‘கார்க்’ கப்பல் 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சியை தொடர்ந்து நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் 1984ஆம் ஆண்டு ஈரான் கடற்படையில் சேர்க்கப்பட்டது.