பிரான்ஸில் எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதி முதல் பதின்மவயதினர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
லொட்டிலுள்ள செயிண்ட் சிர்க் லாபோபி எனும் பகுதிக்கு நேற்று (புதன்கிழமை) சென்றிருந்த போது அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதிக்குள் பிரான்ஸில் 30 மில்லியன் பேரிற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுவிடும்.
இதனால் ஜுன் 15ஆம் திகதியிலிருந்து பதின்ம வயதினர்க்கு அதாவது 12 வயதிலிருந்து 18 வயதினர் வரைக்குமான கொரோனத் தடுப்பூசிகளை நாம் ஆரம்பிக்க முடியும்’ என கூறினார்.
ஏற்கனவே செப்டெம்பரில் பாடசாலைகள் மீளத் திறக்கும் போது, அனைத்து பதின்மவயதினர்க்கும் கொரோனத் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்க வேண்டும் என வெளியான அறிவிப்புக்கு அமைய இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதனிடையே வயது வந்தோரில் 50 சதவீதமானோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரச ஊடக பேச்சாளர் கப்ரியல் அத்தால் அறிவித்துள்ளார்.