எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் நுழைந்தமை உள்ளிட்ட அனைத்து சம்பவமும் சந்தேகத்திற்குரியவை என்பதனால் சுயாதீன விசாரணையை நடத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, கப்பல் சம்பந்தப்பட்ட முழு சம்பவம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் அரசியல் அதிகாரம் மற்றும் பேரழிவிற்கு காரணமான அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
குறித்த கப்பல் மூழ்குவதற்கு முன்னர் அதிகாரிகள் ஏன் தீயை அணைக்கவோ அல்லது ஆழமான கடல்களுக்கு இழுத்துச் செல்லவோ தவறிவிட்டார்கள் என்பது சந்தேகத்திற்குரியது என்றும் அநுர குமார திசாநாயக்க சுட்டிக்கட்டினார்.
பல தசாப்தங்களாக மீட்டெடுக்கவோ அல்லது சரிசெய்யவோ முடியாத கடல் சூழலுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த பேரழிவு காரணமாக மீன்வளத் தொழிலும் பெரும் நெருக்கடியில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.