அவுஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் தளர்த்தப்படும் என விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் பயணக்கட்டுப்பாடு மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு சில கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரத்திற்கு இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசிய சேவையைத் தவிர்த்து மக்களை வீட்டிலேயே இருக்கும்படி கட்டாயப்படுத்திய இரண்டு வார கட்டுப்பாடுகளுக்கு பின்னர் மக்கள் நாளை முதல் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மக்கள் தங்கள் வீடுகளில் 25 கி.மீ க்குள் இருக்க வேண்டும் என்றும் முக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விக்டோரியா மாநிலம் உட்பட நாடு முழுவதும் தடுப்பூசி போடும் வரை, கொரோனா வைரஸ் இன்னும் நம்முடன் இருக்கும் என விக்டோரியா மாநில பதில் பிரதமர் ஜேம்ஸ் மெர்லினோ தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தியமை காரணமாக தற்போது 30,200 க்கும் மேற்பட்ட நோயாளிகளும் 910 இறப்புகளை பதிவாகியுள்ளன.