உணவு விநியோகம் செய்ய சென்ற ஊழியரை மறித்து அவரிடமிருந்த இரண்டு உணவு பொதிகளை நேற்று(வியாழக்கிழமை) இரவு சுன்னாகம் பொலிஸார் மிரட்டி கொள்ளையிட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலையே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருதனார் மடம் சந்திக்கு அருகில் சீருடையுடன், பொலிஸ் வாகனத்தில் நின்றிருந்த சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸாரே இந்த உணவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “சாவகச்சேரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒருவர் உணவு பெற்றுக்கொள்ள தொலைபேசி ஊடாக பதிவு (ஓடர்) செய்துள்ளார்.
அவருக்கான உணவினை விநியோகம் செய்வதற்காக குறித்த உணவக ஊழியர் சென்ற போது, மருதனார் மடம் சந்திக்கு அருகில் குறித்த ஊழியரை வழிமறித்த சீருடை அணிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அவரிடம் இருந்த இரண்டு உணவு பொதிகளை மிரட்டி கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஊழியரினால், உணவாக உரிமையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து, அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்துள்ளார்.
தனது முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தான் இது குறித்து உயர் பொலிஸ் அதிகாரிகளிடமும் முறையிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த உணவாக உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்யும் தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.