நீண்ட இழுபறி மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இஸ்ரேலின் புதிய பிரதமராக நெஃப்தலி பென்னெட் பதவியேற்றுள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில்,பெரும் பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் வலதுசாரி தேசியவாதி நெஃப்தலி பென்னெட் பதவியேற்றார்.
இதன்போது தனது அரசாங்கம் அனைத்து மக்களுக்காகவும் செயற்படும் என்றும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கும் என்றும் உறுதியளித்தார்.
அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக யமினா கட்சியின் தலைவரான பென்னட், செப்டம்பர் 2023ஆம் ஆண்டு வரை பிரதமராக இருப்பார்.
பின்னர் அவர் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு மையவாதியான யேஷ் அதிட் கட்சியின் தலைவரான யெய்ர் லாப்பிட் என்பவரிடம் அதிகாரத்தை ஒப்படைப்பார்.
இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த நெதன்யாகு வலதுசாரி லிக்குட் கட்சியின் தலைவராக இருந்து எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார்.
நெஃப்தலி பென்னெட்டின் அமைச்சரவையில் 27 பேர் உள்ளனர். அதில் 9 பெண்களும் அடங்குவர்.
புதிய பிரதமர், இராணுவம் மற்றும் உளவுத்துறை விடயங்களில் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து வருவதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான்கு முறை நடைபெற்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி நடந்த தேர்தலில், மொத்தம் உள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாகு கட்சி 30 இடங்களைப் பிடித்தது. தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் நெதன்யாகுவால் கூட்டணி அரசாங்கம் அமைக்க முடியவில்லை. இதனால் இழுபறி நிலைமை நீடித்தது.
இதற்கிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டது. இஸ்ரேலிய அரசியலின் அனைத்து வகையானக் கொள்கைகளையும் கொண்டதாக புதிய கூட்டணி அமைந்திருக்கிறது.